திரு. பீ.ஏ. லயனல்
நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீன பணிப்பாளர்
திரு. பீ.ஏ. லயனல் அவர்கள் 2021 செப்டெம்பரில் HDFC வங்கியின் பணிப்பாளர் சபை அங்கத்தவராக நியமிக்கப்பட்டார். திரு. லயனல் அவர்கள் இலங்கை வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் ஆவார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த பின்னர், 1983 இல் ஒரு முகாமைத்துவ பயிலுனராக அவர் இலங்கை வங்கியில் இணைந்து கொண்டார். தொழில்ரீதியான ஒரு வங்கியாளரான அவர் வங்கி மற்றும் நிதிச் சேவைகளில் சுமார் 40 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டுள்ளார். இலங்கை வங்கியின் திறைசேரி, முதலீடு மற்றும் சர்வதேச தொழிற்பாடுகளுக்கான சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர், மனித வளங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர், மற்றும் முதலீட்டு வங்கிச்சேவைக்கான பிரதிப் பொது முகாமையாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். 2011 முதல் 2014 வரை இலங்கை வங்கியில் முதலீட்டுச் சபையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
இலண்டனில் திறைசேரி முகாமைத்துவம் மற்றும் அந்நிய செலாவணி கையாளுவதில் பரந்த அனுபவத்தையும் மற்றும் விரிவான பயிற்சியையும் அவர் பெற்றுள்ளார். 1998 முதல் 2001 வரை கராச்சியில் இலங்கை வங்கியின் திறைசேரிக்கு அவர் தலைமை வகித்துள்ளார். 10 ஆண்டுகளாக கடன் சபை மற்றும் சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவ சபையின் அங்கத்தவராக செயற்பட்டுள்ள அவர், நாடு கடந்த நிதி மற்றும் இணை நிதிக் கருவிகளின் விற்பனையில் பாண்டித்தியம் பெற்றுள்ளார். அரசாங்க பத்திரங்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தைகளில் 20 ஆண்டு கால அனுபவத்தை அவர் கொண்டுள்ளதுடன், இலங்கை வங்கியின் முதன்மை வணிகப் பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
அவரது தலைமைத்துவத்தின் கீழ், இலங்கை வங்கியின் திறைசேரி பல சாதனைகளை நிலைநாட்டியிருந்தது. 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட இரு வேறு 500 மில்லியன் அமெரிக்க டொலர் பிணைமுறிகளின் வழங்கல், இலங்கையிலுள்ள வங்கியொன்றால் இது வரை வழங்கப்பட்டுள்ள ஆகக்கூடிய சர்வதேச பிணைமுறி வழங்கலாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் முதல்முறையாக அமெரிக்க டொலர் கடன் பத்திரம் வழங்கியமை, அரசாங்க நிறுவனமொன்றுக்கு (நகர அபிவிருத்தி அதிகார சபை) அதிகூடிய தொகைக்கான கடன் பத்திரம் வழங்கியமை ஆகியன அவராலேயே கட்டமைப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவரது காலத்தில் இலங்கைக்கு வெளிநாட்டு நிதிகளை கொண்டு வருவதற்காக, பல்வேறு வெளிநாட்டு வங்கிகளுடன், பல்வேறு பாரிய வெளிநாட்டு நாணய கூட்டுக் கடன்களை அவர் கட்டமைத்திருந்தார்.
இலங்கை வங்கியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், 2015 ஆம் ஆண்டில் தேசிய சேமிப்பு வங்கியின் முகாமைத்துவ அணியில் திரு. லயனல் இணைந்து கொண்டார். மூன்று ஆண்டுகளாக திறைசேரி மற்றும் சொத்து முகாமைத்துவப் பிரிவுக்கு தலைமை வகித்திருந்தார். அவரது வழிகாட்டலின் கீழ், தேசிய சேமிப்பு வங்கியின் திறைசேரி மற்றும் அந்நியச் செலாவணி செயல்பாடுகள் அந்நியச் செலாவணி சந்தையில் ஆரம்பிக்கப்பட்டன.